Tuesday, January 16, 2007

வங்கக்கடல் கடைந்த மாதவனை - TPV30 - பகுதி II

இப்பாசுரத்தின் முதற்பகுதியை வாசித்து விட்டுத் தொடரவும்.

முதல் பாசுரத்தில், நோன்புக்கான நேரம், நோன்புக்கான மூலப்பொருள் (கிருஷ்ணன்) குறித்தும்,

2-வது பாசுரத்தில், நோன்பின்போது செய்யத் தகாதவை பற்றியும்,

3-வது பாசுரத்தில், நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்தும்,

4-வது பாசுரத்தில், மழைக்காக வருணனை வேண்டியும்,

5-வது பாசுரத்தில், நோன்புக்கு ஏற்படக் கூடிய தடைகளை கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றியும்,

6-வது பாசுரத்திலிருந்து 15-வது பாசுரம் வரையில், கோகுலத்தில் வாழும் கோபியரை, உறக்கம்
விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியார் கூட்டத்தோடுச் சேருமாறு விண்ணப்பித்தும்,

16-வது பாசுரத்தில், நந்தகோபர் மாளிகையில் உள்ள துவார பாலகரை எழுப்பி, உள் செல்ல அனுமதி வேண்டியும்,

17-வது பாசுரத்தில், நந்தகோபர், யசோதா பிராட்டி, கண்ணபிரான், பலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக விண்ணப்பித்தும்,

18-வது பாசுரத்தில், நப்பின்னை பிராட்டியை மிக்க மரியாதையுடன் விழித்தெழ வேண்டியும்,

19-வது மற்றும் 20-வது பாசுரங்களில், நப்பின்னை, கண்ணன் என்று, ஒரு சேர, இருவரையும் உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தும்,

21-வது மற்றும் 22-வது பாசுரங்களில், (கோபியர்) கண்ணனின் கல்யாண குணங்களைப் போற்றியும், தங்கள் அபிமான பங்க நிலைமையை ஒப்புக் கொண்டும், கண்ணனின் அருட்கடாட்சத்தை மட்டுமே (தங்கள் சாபங்கள் ஒழிய) நம்பி வந்திருப்பதையும்,

23-வது பாசுரத்தில், கிருஷ்ண சிம்மத்தை அவனுக்கான சிம்மாசனத்தில் அமர வேண்டியும்,

24-வது பாசுரத்தில், அம்மாயப்பிரானுக்கு மங்களாசாசனம் செய்தும் (திருப்பல்லாண்டு பாடிப்
போற்றியும்),

25-வது பாசுரத்தில், (கோபியர்) தங்களை ரட்சித்து அரவணைக்க அவனைத் தவிர வேறு
மார்க்கமில்லை என்று உணர்த்தியும்,

26-வது பாசுரத்தில், நோன்புக்கான பொருள்களை கண்ணனிடம் யாசித்தும்,

27-வது பாசுரத்தில், பாவை நோன்பு முடிந்ததும், (கோபியர்) தாங்கள் வேண்டும் பரிசுகளை
பட்டியலிட்டும்,

28-வது பாசுரத்தில், (கோபியர்) தங்களது தாழ்மை, கண்ணனின் மேன்மை, அவனுடனான பிரிக்க முடியாத உறவு, தங்களது பாவ பலன்களை நீக்கக் கோருதல் ஆகியவை பற்றியும்,

29-வது பாசுரத்தில், எந்நாளும் பிரியாதிருந்து கண்னனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு அருள வேண்டியும்,

30-வது பாசுரத்தில், திருப்பாவை சொல்லும் அடியார்கள் கண்ணபிரானின் அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளியிட்டும்

30 அற்புதமான பாசுரங்கள் வாயிலாக, முதற்பாடலிலிருந்து இறுதிப் பாசுரம் வரை, தொடர்ச்சியும் ஓட்டமும் பங்கப்படா வகையில், கோதை நாச்சியார், ஒரு கிருஷ்ண காவியத்தையே படைத்துள்ளார் ! இனிய எளிய தமிழில் வேத சாரத்தை உள்ளர்த்தங்களில் வெளிப்படுத்தும் திருப்பாவை, 'கோத உபநிடதம்' என்று போற்றப்படுகிறது !


பாசுரச் சிறப்பு:

1. இங்கே "வங்கக் கடல் கடைந்த"வனை 'மாதவன்' என்று ஆண்டாள் அழைக்கக் காரணம், அவரது ஆச்சார்யனும், தந்தையும் ஆன பெரியாழ்வாரின் உபதேசத்தை மனதில் வைத்தே என்று ஒரு கருத்துண்டு, அதாவது, பெரியாழ்வார் பாடியது போல, "மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி" ! மேலும், மாதவன் என்பதற்கு பிராட்டியோடு கூடி இருப்பவன் என்று பொருள் இருப்பதால், திருப்பாற்கடலைக் கடைந்து அப்போது தோன்றிய திருமகளை தன் திருமார்பில் தரித்துக் கொண்ட அம்மாயப்பிரானை 'மாதவன்' என்றழைப்பது பொருத்தமாகிறது !

2. 'கேசவன்' என்ற திருநாமம் பரமனது பரத்துவத்தை உணர்த்துகிறது. கேசவனில் உள்ள 'க' சப்தம் பிரம்மனையும், 'சவன்' ஈஸ்வரனையும் குறிக்கின்றன. அதாவது, பிரம்மனும், சிவனும் திருமாலுக்குள் அடக்கம் என்பதைச் சொல்கிறது.

3. "வங்கக்கடல் கடைந்த" என்ற திருச்செயல், அடியார் மேல் பரமனுக்குள்ள வாத்சல்யத்தையும், பரமனது எங்கும் வியாபித்திருக்கும் நிலையையும் உள்ளர்த்தமாக கொண்டிருப்பதாக பெரியோர் கூறுவர்.

4. 'பட்டர்பிரான் கோதை சொன்ன' என்று அறிவிப்பதன் மூலம், தன் தந்தையே தன் ஆச்சார்யன்
என்பதை உணர்த்துகிறார், சூடிக் கொடுத்த நாச்சியார் ! மதுரகவியாழ்வாரும், "தென்குருகூர் நம்பிக்கு அன்பானை மதுரகவி சொன்ன சொல்" என்று பாடியே, கண்ணிநுண் சிறுத்தாம்பை நிறைவு செய்துள்ளார். ஆகையால், ஆண்டாளின் திருப்பாவையும், மதுரகவியின் கண்ணிநுண் சிறுத்தாம்பும் ஆச்சார்யனை முன்னிறுத்தியதால், தனிச்சிறப்பு பெற்ற பிரபந்தங்களாகக் கருதப்படுகின்றன.

5. செங்கண் - பரமனின் திருக்கண்களானது, திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் சுட்டப்பட்டுள்ளன ! அவை அழகும் வசீகரமும் கொண்டதோடன்றி, பரமனின் அருட் கடாட்சத்தை அடியார்களிடம் செலுத்தும் திரு அவயங்களாக அறியப்படுகின்றன ! ஆழ்வார்கள் பரந்தாமனின் திருக்கண்கள் மேல் பெருங்காதல் கொண்டவர்கள் !!! ஆண்டாளும், கண்ணனது கருணை பொழியும் கண்களை, திருப்பாவையில்

கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானை
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்* அங்கண் இரண்டும்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்


என்று 5 இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

6. "கோவிந்தா" என்ற திருநாமம் திருப்பாவையில் மூன்று முறை (கூடாரை வெல்லும், கறவைகள் பின்சென்று, சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை என்று 3 பாசுரங்களில்) குறிப்பிடப்பட்டிருப்பது போல, "நாராயணா" என்ற திருநாமமும்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த - "நாராயணனே நமக்கு பறை தருவான்",
கீசுகீசென்று ஆனைச்சாத்தன் கலந்து - "நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்",
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - "நாற்றத் துழாய் முடி நாராயணன்"


என்று மூன்று முறை வருகின்றன !

7. செல்வத் திருமால் - பரமன் ஆன ஸ்ரீநிவாசன், அளவிட முடியாத ஐசுவர்யங்களையும், அடியார்கள் பால் பேரன்பும், கருணையும் உடையவன்.
த்வய மந்த்ரத்தின் பூர்வப் பகுதியின் 'ஸ்ரீமத்' சப்தம் 'மாதவன்' என்று வரும் பாசுரத்தின் முதலடியிலும், உத்தரப் பகுதியினுடையது 'செல்வத் திருமால்' என்று வரும் கடைசி அடியிலும் வெளிப்படுவது சிறப்பு !

8. 'எங்கும் திருவருள் பெற்று" என்பது இம்மையிலும், மறுமையிலும் அவன் திருவருளை வேண்டுவதைக் குறிக்கிறது.

சூடிக் கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 285 ***

2 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

said...

arumaiyAna utpoRuL ... nanRi

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails